எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மார்ட் டிஹான்கட்டுரைகள்

பாதங்களுக்கு, ஒரு நல்ல செய்தி

“சரித்திரத்தில் இதுவரை காணாத சுகத்தை தரும் காலுறைகள்,” என்ற விளம்பரத்தைப் பார்த்தபோது என் முகத்தில் சிரிப்பு வந்தது. அதைத் தொடர்ந்து, பாதங்களுக்கு ஒரு நல்ல செய்தி, வீடற்றவர்களின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான தேவை காலுறைகள். எனவே ஒவ்வொரு ஜோடி காலுறை வாங்கும் போதும், மற்றொரு ஜோடி தேவையுள்ள ஒருவருக்கு இலவசமாகக் கொடுக்கப்படும் எனவும் அந்த விளம்பரதாரர் தெரிவித்தார்.

முப்பத்தெட்டு வருடமாய் நடக்க முடியாமலிருந்த ஒரு மனிதனை இயேசு குணமாக்கிய போது அவன் எவ்வாறு சிரித்திருப்பான் என்று நினைத்துப் பார் (யோவா. 5:2-8). அதே வேளையில் தேவாலயத்தின் அதிகாரிகளின் முகத்தில் தோன்றிய பார்வையை எண்ணிப் பார்த்தால், அவர்கள் யாருமே, நீண்ட நாட்களாக உதவியற்றிருந்த ஒரு மனிதனின் கால்களையும், இருதயத்தையும் குறித்து இயேசு கரிசனை கொண்டதைக் குறித்து நல்லெண்ணம் கொண்டதாகத் தெரியவில்லை. ஓய்வுநாளில் எந்தவொரு வேலையும் செய்யக்கூடாது என்ற அவர்களுடைய சட்டத்தை மீறியவர்களாக இயேசுவையும், அந்த மனிதனையும் குறித்து குற்றம் சாட்டினர் (வச. 9-10, 16-17). இயேசு, இரக்கத்தின் தேவையை உணர்ந்த இடத்தில், அவர்கள் சட்டத்தைப் பார்த்தனர். 

இது வரையில் அம்மனிதனுக்கு தன்னுடைய கால்களை சுகப்படுத்தியவர் யாரென்றே தெரியாது. பின்னர் தான் தன்னை சுகப்படுத்தியவர் இயேசு என்று தெரிந்து கொள்கின்றான் (வச. 13-15) அதே இயேசு தன்னுடைய பாதங்களை மரத்தில் அடிக்கப்பட ஒப்புக்கொடுத்தார். இதன் மூலம் அம்மனிதனுக்கும், நமக்கும், உடைந்த சரீரமும், உள்ளமும், இருதயமும் கொண்டவர்களுக்கும், சரித்திரத்தில் இதுவரை கேட்டிராத நல்ல செய்தியைத் தந்துள்ளார் .

 

எல்லா நாமங்களுக்கும் மேலான நாமம்.

அன்டோனியோ ஸ்ட்ராடிவேரி (1644-1737) இசையுலகில் ஒரு சரித்திரம் படைத்தவர். அவருடைய வயலின்களும், செல்லோக்களும், வயோலாக்களும் பொக்கிஷங்களாகக் கருதப் பட்டன. அவற்றின் நுணுக்கமான அமைப்பும், தெளிவான இசையும் அவருக்குப் பல புனை பெயர்களைக் கொடுத்தன. அவற்றுள் ஒன்று – மேசியா சலேபு ஸ்ட்ராடிவேரியஸ். வயலின் மேதையான ஜோசப் ஜோக்கிம் (1831-1907) இப்பாடலை வாசித்த போது  அவர், “ஸ்ட்ராடின் ஒலியின் தனித்துவம் நிறைந்த “மெசையா” என்ற பாடலின் இனிமையும், சிறப்பும் மீண்டும் மீண்டும் என் மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது” என்றார்.

இத்தகைய புகழ் பெற்ற ஸ்ட்ராடிவேரியஸின் பெயர் கூட மற்றொரு பெரியவரின் செயலுக்கு அருகில் வைக்கத் தகுந்ததல்ல. மோசேயிலிருந்து இயேசு வரை தேவாதி தேவன் தன்னை எல்லா நாமத்திற்கும் மேலான நாமமாக  வெளிப் படுத்துகின்றார். அவருடைய ஞானத்தையும், கரத்தின் கிரியைகளையும் நாம் கண்டுணர்ந்து அவரைக் கனப் படுத்தி இசையோடு அவரைப் போற்றும் படி விரும்புகின்றார் (யாத். 6:1; 15:1-2)

துயரத்திலிருந்து கூப்பிடும் ஜனங்களின் கூக்குரலுக்கு பதில் கொடுத்து அவர்களை விடுவிக்கும்படி தனது வல்லமையான செயல்களைக் காண்பிக்கின்றார். இது ஓர் ஆரம்பம் மட்டுமே. சிலுவையில் அடிக்கப்பட்டு பெலவீனமான அவருடைய கரங்களினால், முடிவில்லாத நித்திய மகிமையை நிலை நாட்டுவார் என யார் தான் முன்னறிந்திருக்க முடியும்? நம்மீதுள்ள  மிகப்பெரிய அன்பினால், நம்முடைய பாவங்களால் ஏற்பட்ட அவமானத்தையும், தள்ளப் படுதலையும் சகித்து, மரித்து உயிர்த்த ஒரு நாமத்தின் அதிசயத்தையும், மகத்துவத்தையும் குறித்து நாம் போற்றி இசையோடு பாடுவோம் என்று யாரேனும் நினைத்திருப்பார்களா?

ஒளியைப் பார்த்தல்

லாஸ் ஏஞ்சல்ஸ் பட்டணத்தின் தெருக்களின் வழியே, ஒரு வீடற்ற மனிதன், போதைக்கு அடிமையாகி போராடிக் கொண்டிருந்தபோது, ஒரு “நள்ளிரவு சேவைமையத்” திற்குச் சென்று உதவி கேட்டான். இவ்வாறு பிரையனின் மீட்புக்கு நேரான நீண்டபயணம் துவங்கியது.

இந்த செயலின் போது, இசைமீது தனக்கிருந்த ஆவலை பிரையன் மீண்டும் கண்டு கொண்டான். தெருக்களில் வாழும் இசை மீட்டும் இசைக் கலைஞர்களின் குழுவில் சேர்ந்தான். அவர்கள் பிரையனிடம் ஹன்டல் என்பவர் எழுதிய ‘மேசியா’ என்ற பாடலைத் தனிப்பாடலாக பாடுமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்தப் பாடல் “இருளில் நடக்கிற ஜனங்கள்” என ஆரம்பமாகும். இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரத்தில் அவர்கள் ஓர் இருண்ட காலத்தைச் சந்தித்த போது, ஏசாயா தீர்க்கதரிசி இந்த வார்த்தைகளை எழுதினார். அவர், “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசா. 9:2) என்ற வார்த்தைகளை பாடினார். நியூயார்க் பட்டணத்திலுள்ள ஒரு பத்திரிக்கையிலே ஓர் இசைக் கலைஞனான பிரையனின் பாடலைக் குறித்து அந்தப் பாடலின் வரிகள் அவனுடைய சொந்த வாழ்க்கையிலிருந்தே எடுக்கப்பட்டவை போலிருந்தன” என விமர்சிக்கப்பட்டிருந்தது.

சுவிசேஷத்தை எழுதிய மத்தேயுவும் இதே பகுதியைக் குறிப்பிட்டுள்ளார். ஒருவரையொருவர் ஏமாற்றி வாழும் வாழ்வின் மத்தியிலிருந்து இயேசுவினால் அழைக்கப்பட்ட மத்தேயு, ஏசாயாவின் இந்த

தீர்க்கதரிசன வார்த்தைகள் இயேசுவின் மூலம் நிறைவேற்றப்பட்டதை விளக்குகின்றார். “யோர்தானின் அக்கரையிலிருந்த” ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகளை இயேசு “புறஜாதிகளின் கலிலேயாவுக்கு” இயேசு எப்படிக் கொண்டு வந்தார் என்று மத்தேயு விளக்குகின்றார் (மத். 4:13-15).

ராயனின் வரிவசூல் குண்டர்களில் ஒருவனான மத்தேயு (மத். 9:9), போதைக்கு அடிமையாகி தெருவில் திரிந்த பிரையன் அல்லது நம்மைப் போன்றவர்கள், ஒளிக்கும் இருளுக்குமுள்ள வித்தியாசத்தை நம் வாழ்வில் காட்ட ஒரு தருணம் கிடைக்குமென்று யார் நினைத்திருக்கக்கூடும்.

ஆவியில் பாடுங்கள்

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நடைபெற்ற வெல்ஷ் எழுப்புதல் கூட்டங்களின் போது, தான் கண்டவற்றை வேத போதகரும் எழுத்தாளருமான பு. கேம்ப்பெல் மோர்கன் எழுதுகின்றார். தேவனைப் போற்றும் பாடல்களின் அலை ஓசையில் பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதலும் தேவப் பிரசன்னமும் இருந்ததை நம்புகின்றார். அந்தக் கூட்டங்களில் இசையின் மூலம் அனைவரையும் ஒருமுகப்படுத்தி, சிலரைத் தானாக ஜெபிக்கவும், பாவ அறிக்கை பண்ணவும், தானாகப் பாடவும் ஊக்குவித்ததை மோர்கன் கண்டதாக எழுதுகின்றார். யாராகிலும் அங்கு தங்களுடைய உணர்வுகளால் உந்தப்பட்டு நீண்ட நேரம் ஜெபித்தாலோ அல்லது மற்றவர்களோடு இசைந்திராமல் பேசினாலோ மற்றொருவர் மெல்லிய குரலில் பாட ஆரம்பிக்கின்றார். மற்றவர்கள் அப்பாடலோடு இணைந்துகொள்கின்றனர். மற்றவர்கள் அப்பாடலின் பல்லவி வரும்போது உரத்த குரலில் பாட ஆரம்பிக்கின்றனர். மற்ற சப்தங்களெல்லாம் அதில் அமிழ்ந்து விடுகின்றது.

மோர்கன் விளக்குகின்ற, இத்தகைய பாடல் மூலம் துதித்தலை வேதாகமத்திலும் காண்கின்றோம். அங்கும் இசை முக்கிய பங்காற்றுகிறது. வெற்றியைக் கொண்டாட இசை பயன்பட்டது (யாத். 15:1-21). ஆலய பிரதிஷ்டையின் போது தேவனை ஆராதிக்கவும்

(2 நாளா. 5:12-14), இராணுவத்தின் யுத்த முறைகளில் ஒரு பகுதியாகவும் (20:21-23) இசை பயன்படுத்தப்பட்டது. வேதாகமத்தின் மையத்திலுள்ள புத்தகமான சங்கீதம் பாடல்களால் நிறைந்த புத்தகம் (சங். 1-150). புதிய ஏற்பாட்டில், பவுல் எபேசியருக்கு எழுதிய கடிதங்களிலும் பரிசுத்த ஆவியின் செயல்பாட்டை விளக்குகின்றார். 'ஆவியினால் நிறைந்து சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக் கொண்டு உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடி கீர்த்தனம்பண்ணுங்கள்" என்கின்றார் (எபே. 5:18-19).

போராட்டங்களிலும், ஆராதனையிலும், வாழ்வின் எல்லா நிலைகளிலும் நம் விசுவாசத்தின் பாடல்கள் ஒருமனத்தைக் கொண்டுவர உதவுகின்றன. பழைய புதிய வகை இசையின் மூலம் நாம் மேலும் மேலும் புதுப்பிக்கப்படுகின்றோம். வல்லமையாலும், அதிகாரத்தாலுமல்ல, ஆவியினாலும் தேவனைப் போற்றும் பாடல்களாலுமே இது நடக்கின்றது.

இருதயத்தின் அசைவுகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் மக்கட்தொகை அலுவலக அறிக்கைபடி, அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக பதினொன்று முதல் பன்னிரண்டு முறையாவது தங்களுடைய வாழும் இடத்தை மாற்றிக் கொள்வர். சமீபத்தில் ஓர் ஆண்டில் 28 மில்லியன் மக்கள் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு மற்றொரு இடத்திற்கு நகர்ந்து புதிய வீட்டில் குடியேறியுள்ளனர்.

இஸ்ரவேலரின் 40 ஆண்டுகள் வனாந்திரப்பயணத்தில், ஒரே குடும்பமாகிய ஒரு தேசத்தின் மக்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு, தேவனுடைய பிரசன்னம் வழிநடத்தியது. அவர்கள் ஒரு புதிய தேசத்தைச் சுதந்தரிக்கும் நம்பிக்கையோடு பிரயாணம் செய்தனர். இந்தக் காரியம் அடிக்கடி நடந்தது. அதனைக் குறித்து வேதத்தில் நாம் வாசிக்கும் போது வேடிக்கையாகவுள்ளது. அந்த மிகப் பெரிய குடும்பம் திரும்பத் திரும்ப தங்கள் உடைமைகளைக் கட்டுவதும், கட்டவழிப்பதும் நடந்தேறிக் கொண்டேயிருந்தது. அவர்களுடைய உடைமைகளை மட்டுமல்ல, மேகத்திலிருந்து தேவன் மோசேயைச் சந்தித்த தேவனுடைய ஆசரிப்புக் கூடாரம் மற்றும் உடன்படிக்கைப் பெட்டி ஆகியவற்றையும், அவற்றின் விரிப்புகளையும் கட்டிக் கொண்டுச் சென்றனர் (யாத். 25:22).

அநேக ஆண்டுகளுக்குப் பின்னர் இயேசு, இஸ்ரவேலரின் பிரயாண நாட்களுக்கு ஒரு முழு அர்த்தத்தைக் கொடுத்தார். ஒரு மேகத்திலிருந்து வழிநடத்துவதற்குப் பதிலாக அவரே நேரில் வந்தார். அவர், 'என்னைப் பின்பற்றி வா" (மத். 4:19) என்று சொன்ன போது மிக முக்கியமான முகவரி மாற்றம் அவர்களுடைய இருதயத்தில் ஏற்படும்படிச் செய்தார். நண்பர்களையும், எதிரிகளையும் ஒரு ரோம சிலுவையின் அடிவாரத்திற்கு வழி நடத்திச் சென்று, மேகத்தில் தோன்றிய தேவன், அவருடைய ஆசரிப்பு கூடாரத்தில் பேசிய கர்த்தர், எவ்வாறு அவர்களை மீட்கப் போகின்றாரென்பதைக் காண்பித்தார்.

தம் முகவரியை மாற்றுவது போல, இருதயத்தின் அசைவுகளும் நிலையானதல்ல. ஆனால், ஒரு நாள் நம் தந்தையின் வீட்டிலுள்ள ஜன்னல் வழியே நாம் கடந்து வந்த பாதையைப் பார்க்கும் போது, இயேசு நம்மை எத்தனை தூரம் வழிநடத்தி வந்துள்ளார் என்பதைக் காண்போம்.

இதனிலும் பெரிய மகிமை

ரோமப் பேரரசர்களில் முதலானவரும் மிகவும் பெரியவருமாக அகஸ்டஸ் சீசர் நினைவுகூரப்படுகின்றார். தன்னுடைய அரசியல் செல்வாக்கையும் இராணுவப்படையின் வல்லமையையும் பயன்படுத்தி தன்னுடைய எதிரிகளை அகற்றினார். தன்னுடைய இராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார். ரோமாபுரியின் ஒழுங்கற்ற, பழைய, பயனற்ற நிலையை அகற்றி, பளிங்கு கற்களாலான சிற்பங்களும், கோவில்களும் நிறைந்த பட்டணமாக மாற்றினார் போற்றினார். அவரைப் போற்றிய ரோம மக்கள் அவரைத் தேவனுக்குச் சமமான தந்தையாகவும் மனுக்குலத்தை மீட்பவராகவும் போற்றினர். அவருடைய நாற்பது ஆண்டு அரசாட்சி முடிவடையும் தருவாயில் அவருடைய அரசுக்கு அவர் கொடுத்த கடைசி வார்த்தைகள், “நான் ரோமாபுரியை ஒரு களிமண் பட்டணமாகக் கண்டெடுத்தேன். அதனை ஒரு பளிங்கு பட்டணமாக விட்டுச் செல்கின்றேன்" என்பது அவருடைய மனைவியின் கூற்றுப்படி அவரின் கடைசி வார்த்தைகள், “நான் என்னுடைய பணியை நன்றாகச் செய்தேனா? அப்படியாயின் நான் போகும் போது என்னைப் பாராட்டுங்கள்" என்பது.

அகஸ்டஸ் அறியாதது என்னவெனில் ஒரு பெரிய நிகழ்வில் அவருக்கு ஒரு சிறிய பங்கே கொடுக்கப்பட்டது. அவருடைய அரசாட்சியின் மறைவில் ஒரு தச்சனின் மகனாகப் பிறந்த ஒருவர், ரோம இராணுவத்தையும் வெற்றிகளையும், கோவில்களையும், அரங்கங்களையும், அரண்மனைகளையும் காட்டிலும் மிகப் பெரிய ஓர் உண்மையை வெளிப்படுத்தினார் (லூக். 2:1)

அன்று ராத்திரியிலே அவருடைய சொந்த ஜனங்கள் அவரை ரோமப் போர் சேவகர்களால் சிலுவையில் அறையப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டபோது, இயேசு பிதாவிடம் வேண்டிக் கொண்ட மகிமையை எத்தனை பேர் புரிந்து கொண்டிருப்பர்? (யோவா. 17:4-5) பரலோகத்திலும் பூலோகத்திலும் என்றைக்கும் போற்றப்படும் அந்த மறைவான பலியின் அதிசயத்தை யார் தான் முன்னறிந்திருப்பார்கள்?

அது ஒரு முழுமையான நிகழ்வு. நாம் முட்டாள்தனமான கற்பனைகளைத் தொடர்பவர்களாகவும், நமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்பவர்களாகவும் தேவன் நம்மைக் காண்கி;றார். அவர் நாம் அனைவரும் சேர்ந்து அந்த பழமையான சிலுவையைக் குறித்துப் பாடும்படி நம்மை வைத்திருக்கின்றார்.

பரலோகத்தின் அன்புப் பாடல்

1936 ஆம் ஆண்டு பாடலாசிரியர் பில்லி ஹில் என்பவர் ஒரு பிரபல்யமான பாடலை வெளியிட்டார். அது “அன்பின் மகிமை” என்ற பாடல். சில ஆண்டுகளுக்குமுன், அன்பினால் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் சிறிய காரியங்களால் ஏற்படும் மகிழ்ச்சியைக் குறித்து ஒரு நாட்டினர் பாடிக் கொண்டிருந்தனர். ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், பாடலாசிரியர் பீட்டர் சீற்ரா இதே தலைப்பில் அதிக உணர்வுபூர்வமான பாடல் ஒன்றை எழுதினார். அவருடைய கற்பனையில் இருவர் நீடித்து வாழ்வதாகவும், அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டவர்களாகவும், எல்லாவற்றையும் அன்பின் மகிமைக்காகச் செய்ததாகவும் எழுதினார்.

வேதாகமத்தின் கடைசி புத்தகமான வெளிப்படுத்தலில் ஒரு புதிய அன்புப் பாடல் விளக்கப்பட்டுள்ளது. அது ஒரு நாள் புவியிலும் பரலோகத்திலுமுள்ள அனைவராலும் பாடப்படும் பாடல் (வெளி. 5:9,13). அந்தப் பாடலின் இசை ஆரம்பத்தில் ஒரு துயரத்தொனியோடு ஆரம்பிக்கின்றது. பூமியில் காண்கின்ற அநியாயங்கள் ஒன்றிற்கும் பதிலேயில்லை என்பதைக் கண்ட யோவான், இதை எழுதியவர் அழுகின்றார் (வச. 3-4). ஆனால், உண்மையான மகிமையையும் உண்மை அன்பின் கதையையும் தெரிந்து கொண்டபோது யோவானின் முகம் பிரகாசிக்கின்றது. அந்த பாடலின் இசை உச்சக் கட்டத்தை எட்டுகின்றது (வச. 12-13). படைப்புகளெல்லாம் வல்லமையுள்ள யூதா கோத்திரத்துச் சிங்கத்தைப் போற்றிப் பாடுகின்றன (வச. 5) அவர் நம்மை மீட்பதற்காக தன்னையே ஓர் ஆட்டுக்குட்டியைப் போல பலியிடப்படும்படி அன்பினால் அர்ப்பணித்தார். எனவே வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழுள்ள சிருஷ்டிகளும், சமுத்திரத்திலுள்ள யாவும் அவரை வணக்கமாய் பணிந்து கொண்டன (வச. 13).

ஒரு சிறிய அன்பின் செயலை பாடலாகப் பாடும் போது அது இதுவரைப் பாடப்பட்ட பாடல்களிலெல்லாம்  அனைவரையும் அசைக்கும் பாடலாகத் திகழ்கின்றது. நாம் பாடும் மகிமையின் பாடல் யாவும் தேவனுடைய உள்ளத்தை வெளிப்படுத்துகின்றன. நாம் அவரைப் பாடுகின்றோம், ஏனெனில், அவரே பாடலைத் தந்தவர்.

உங்கள் நகரத்தைப் பாருங்கள்

“நாங்கள் பார்க்கும்விதமாக எங்கள் நம் நகரத்தைப் பாருங்கள்.” மிஷிகனின் டெட்ராய்ட் நகரில் செயல்படும் நகர வளர்ச்சிக் குழு தங்கள் நகரின் எதிர்காலம் குறித்த திட்டத்தை ஆரம்பிக்க இந்த வாசகத்தை உபயோகித்தது. ஆனால் இந்த பிரச்சாரத்தில் ஒரு முக்கியமான அம்சம் இல்லை என்பதை அந்த ஊர் மக்கள் உணர்ந்தபோது, அந்தத் திட்டம் திடீரென்று நிறுத்தப்பட்டது. ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவர்கள் நகரின் ஜனத்தொகை மற்றும் பணியாளர்களில் பெரும்பான்மையானவர்கள். ஆனால் தாங்கள் பார்க்கும்விதமாக நகரைப் பார்க்கச் சொன்ன அந்தப் பிரச்சாரம் குறித்த விளம்பரங்களிலும், சுவரொட்டிகளிலும் தெரிந்த அநேக முகங்களில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இடம்பெறவே இல்லை.  

இயேசுவின் நாட்டில் இருந்தவர்களுக்கும் எதிர்காலம் குறித்து ஒரு குறுகிய மனப்பான்மை இருந்தது. ஆபிரகாமின் சந்ததியினராக, அவர்கள் யூத மக்களைக்குறித்து மட்டும் அக்கறை கொண்டிருந்தார்கள். சமாரியர்கள், ரோமப் போர்ச்சேவகர்கள், அல்லது தங்களை ஒத்த குடும்பப்பின்னணி இல்லாதவர்கள்,  மதகுருக்கள் அல்லது ஆராதனையைப் பின்பற்றாதவர்கள் குறித்து இயேசு கொண்டிருந்த அக்கறையை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

டெட்ராய்ட், எருசலேம் மக்களின் குறுகிய மனப்பான்மை எனக்குப் புரிகிறது. யாருடைய வாழ்க்கை அனுபவங்கள் எனக்குப் புரிகிறதோ அவர்களை மட்டுமே நானும் பார்க்கிறேன். ஆனால் நம்முடைய வேறுபாடுகள் மத்தியில் நம்மில் ஒற்றுமையை எப்படி ஏற்படுத்துவது என்பதை ஆண்டவர் அறிந்திருக்கிறார். நாம் நினைப்பதைவிட நாம் ஒரேவிதமாக இருக்கிறோம்.

உலக மக்கள் அனைவருக்கும் ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தர, ஆபிராம் என்று பேர்கொண்ட ஒரு பாலைவன நாடோடியை நம் ஆண்டவர் தெரிந்துகொண்டார் (ஆதியாகமம் 12:1-3). நமக்கு இதுவரை தெரியாத அல்லது நேசிக்காத அனைவரையும் இயேசு அறிந்திருக்கிறார், நேசிக்கிறார். நாம் ஒருவரை ஒருவரும், நமது நகரங்களையும், அவர் ராஜ்யத்தையும், அவர் பார்க்கும்விதமாக நாமும் பார்க்க உதவும் தேவனின் இரக்கத்தாலும், கிருபையாலும் நாம் வாழ்கிறோம்.

வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுதல்

வேதாகமத்தை வெவ்வேறு விதமாக விளக்கம் அளிப்பதால் ஏற்படும் முடிவில்லாத விவாதங்களில் பங்கேற்காமல் வெளியேறுவது எவ்வளவு கடினமானது என்று என் தந்தை கூறக்கேட்டிருக்கிறேன். அதே சமயம், இரண்டு தரப்பினரும் அவர்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது நன்றாக இருக்கும் என்றார்.

ஆனால் சமரசமடையாத வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பது சாத்தியமா? புதிய ஏற்பாட்டில், பவுல் ரோமருக்கு எழுதும் கடிதத்தில் இதற்கான பதிலைத் தருகிறார். சமூக, அரசியல், மத பிணக்கங்களில் சிக்கியிருந்த வாசகர்களுக்கு எழுதும்போது, எதிர் எதிர் நிலைமையில் உள்ளவர்கள்கூட எப்படி ஒரு பொதுவான தளத்தில் சேரலாம் என்று பரிந்துரை செய்கிறார் (14:5-6).

கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது குறித்து, நம்முடைய கருத்துக்களுக்காகவும், நம்முடைய வேறுபாடுகளில்  நாம் ஒருவரை ஒருவர் எப்படி நடத்துகிறோம் என்பதற்காகவும், நாம் கடவுளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார் (வச. 10).

நம்முடைய கருத்துக்களைவிட முக்கியமான விஷயங்கள் – நம்முடைய வேதாகம விளக்கங்களையும்விட – உண்டு என்பதை நாம் நினைவுகூர பிணக்கங்கள் உதவும். கிறிஸ்து நம்மை நேசித்ததைப்போல நாம் ஒருவரை ஒருவர் நேசித்தோமா, நம்முடைய எதிரிகளையும்கூட நேசித்தோமா என்று நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.

இப்போது யோசித்துப் பார்த்தால்,  இரண்டு தரப்பினரும், பரஸ்பர அன்பு மற்றும் மரியாதையோடு, அவர்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது நன்றாக இருக்கும் என்று என் தந்தை கூறியது நினைவுக்கு வருகிறது.